அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி தாலா பரகாதுஹு

"நம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

Monday, April 11, 2011

ATS நமது ஓட்டு 49-ஓ விற்குத்தா​ன்!

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இந்தியாவின் இன்றைய நிலை: சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் நாட்டில் 25 சதவிகிதத்தினர் இன்னும் வறுமைக்கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். 2011 ஆண்டு அரசு கணக்கீட்டின்படி சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் தினம் உண்ண உணவின்றி அன்றாடங்காச்சிகளாய் வறுமையில் வாடுகின்றனர். இப்பூமியில் உள்ள சுமார் 145 நாடுகளில் மக்கள் வறுமையில் வாடுவதாக அறியப்பட்டுள்ளது, இந்தியாவிற்கு அதில் 84வது இடம். இந்நிலையில்தான் நம் நாட்டு அரசியல்வாதிகள் கோடான கோடி ரூபாய்களையும், சொத்துக்களையும் இமாலய ஊழல்கள் செய்வது மட்டுமல்லாமல் நாட்டின் வளத்தையே கொள்ளையடிக்கக் கூடிய இழிநிலையைக் காண்கிறோம்.

ஆளுங்கட்சியைப் பார்த்து எதிர் கட்சிகள் 'ஆளுங்கட்சிகாரன் இதோ ஊழல் செய்துவிட்டான், கொலை செய்துவிட்டான், நாட்டை கொள்ளையடித்து விட்டான்' என்று கூப்பாடு போடுகின்றன. ஆனால் அவர்கள் ஆளுங்கட்சியாக மாறும்போது அதே கொள்ளையை, அதே ஊழலை இவர்களும் செய்யத் தவறுவதில்லை. இந்த நிலையில்தான் நாம் வரும் ஏப்ரல் 13, 2011 அன்று சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றோம் மக்களே!

இந்திய முஸ்லிம்களின் நிலை: 121 கோடி இந்திய மக்களில் சுமார் 30 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 800 வருடங்கள் முகலாயர்கள் ஆட்சியின் மூலம் இந்தியாவை கட்டி ஆண்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள், நாட்டின் சுதந்திரத்திற்காக நம் சதவிகிதத்திற்கும் அதிமான அளவு தங்களை அர்ப்பனம் செய்தவர்களின் வாரிசுகளாகிய நாம் இன்று கல்வி, வேலை வாய்ப்புகளில், அரசியல் அதிகாரத்தில் அடுத்தவர்களிடம் கையேந்தும் துர்பாக்கிய நிலையில்தான் இருக்கிறோம். சுமார் 108 முஸ்லிம் எம்பிகள் பாராளுமன்றத்திலும், குறைந்தது 36 முஸ்லிம் உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்திலும் இருக்கவேண்டிய நிலையிலுள்ள நமக்கு, அரசியல் கட்சிகள் தொடர்ந்து இதயத்தில்தான் இடமளிக்கின்றன.

1992ல் முஸ்லிம்களின் இறையில்லமாம் பாபர் மசூதியை இடித்தது முதல், 2010ல் அந்த இடம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமில்லை என்று கூறுபோட்டு தீர்ப்பளித்தது உட்பட குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகளை கொன்றொழித்து அவர்களின் கற்பை சூறையாடிய நிகழ்வுகள் வரை அரசியல் அதிகாரத்திலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்டு அப்புறப்படுத்தப்பட்டதின் விளைவுதான் என்பதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ இயலாது.

நாட்டு பிரச்சனை ஒருபக்கம் இருக்கட்டும், நமதூரின் முக்கிய பிரச்சனைகளுக்காவது இதுவரை நம்தொகுதியில் வெற்றி பெற்ற எந்த அமைச்சராவது குரல் கொடுத்ததுண்டா? அவைகளை தீர்த்து வைப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததுண்டா? என்பதை சிந்தியுங்கள்

1. நமதூரில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புற்றநோய் (Cancer) என்னும் கொடிய ஆட்கொல்லி நோய் பரவி வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இக்கொடிய புற்றுநோயினால் இவ்வுலகைவிட்டும் பிரிந்தோர் எண்ணிலடங்கா. இதற்கெல்லாம் காரணம் அருகிலுள்ள DCW தொழிற்சாலையின் கழிவுகளும்தாம் என்பது அனைவருக்கும் வெளிச்சம். நமதூர் மக்களை கொன்று குவிக்கும் இந்த DCW தொழிற்சாலையின் மீது எந்த அரசியல் கட்சியாவது இதுவரை நடவடிக்கை எடுத்ததுண்டா? எந்த அமைச்சர் இதைபற்றி சட்டசபையில் பேசினார் என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்.

2. நமதூரை ஆக்கிரமித்து சுமார் 6 கோடி ரூபாய் செலவில் 169 சுனாமி வீடுகளை கட்டுகிறார்கள். தேர்தலை முன்னிட்டு கண்துடைப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக கட்டிட வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நமதூர் காயல்பட்டினத்தைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களில் பலபேர் குடியிருக்க வசதியான வீடுகள் இல்லாத நிலையில் அந்நியர்களை குடியமர்த்திய கொடூரத்தை எந்த அரசியல் கட்சி தடுத்து நிறுத்தியது? நமதூர் பெரியவர்களில் சிலர்தானே இந்த விஷயத்தையே வெளியே கொண்டு வந்தனர்.

3. நமதூர் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக இரண்டாவது பைப்லைன் திட்டத்தை அமுல் படுத்துங்கள், எங்கள் ஊருக்கு சுத்தமான குடிநீரைத் தாருங்கள் என்று கடந்த 30 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருக்கிறோமே, கிடப்பில் போடப்பட்டுவிட்ட இத்திட்டத்தை நிறைவேற்றி நமதூரின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க எந்த ஆளும் கட்சி முயற்சி பண்ணியது? எந்த எதிர் கட்சி இதை பற்றி கேள்வி கேட்டது?

4. நமதூரின் மின்சார தேவையை அறிந்து (substation) துணைமின்நிலையம் அமைப்பதற்கு நாம் கோரிக்கைகள் பல வைத்த போதிலும், சுமார் 4 ஏக்கரில் சுனாமி பெயரில் தொகுப்பு வீடுகள் கட்டத் தெரிந்தவர்களுக்கு, அரசு புறம்போக்கு நிலங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து மேற்படி துணைமின்நிலையம் அமைக்க தெரியாமல் போனது ஏனோ? இன்று துணைமின் நிலையத்தைப்பற்றி பேசக்கூட நாதியற்றவர்களாக நாம் இருக்கிறோம்!. என்ன கொடுமை!

5. மேலும் நமதூருக்கு வரவிருந்த நுஊசு ரோடுகூட கபளீகரம் செய்யப்பட்டு வேற்று பாதையில் அமையவிருப்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? மற்ற ஊர்களைவிட நமதூரில் காய்கறிகள் முதல் மளிகை சாமான்கள் வரை அனைத்து விதமான பொருட்களின் விலையில் ஏற்றம், அறிவிக்கப்படாத அடிக்கடி மின்வெட்டு, கோரத்தாண்டவமாடும் சாலைகள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

மேற்காணும் விஷயங்களுக்கெல்லாம் நாங்கள் தீர்வு காண்போம் என்று சிலர் இன்று வாதிடிலாம். இக்குறைகளை ஏன் இதுவரை நீங்கள் தீர்க்கவில்லை என்பதுதான் நமது கேள்வி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவைகளையெல்லாம் நிச்சயமாக செய்து முடிப்போம் என்று காதில் 'பூ' சுற்றும் வேலைக்கெல்லாம் இனி காயல்பட்டின மக்கள் மயங்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் நாள்தான் வருகின்ற ஏப்ரல் 13 தேதி என்பதை மக்களே நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

நமது ஊருக்கு நன்மை செய்யவே மற்றவர்களுக்காக உழைத்து அவர்களை அமைச்சர்களாக்கி அழகுபார்த்தது போதும். இனி நம்மை நாம் ஆளும் காலத்தை எதிர்நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

நம்தொகுதியில் 45 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட சகோதர சமுதாயமான நாடார் இனத்தைச் சார்ந்தவர்கள் 11 முறை ஆடுயு ஆக வரமுடிகிறது, சுமார் 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கொண்ட சகோதர சமுதாயமான பெர்ணான்டஸ் இனத்தைச் சார்ந்தவர்கள் 4 முறை நம்மை ஆளமுடிகிறது என்றால் 35 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நம்தொகுதியில் இதுவரை ஏன் ஒரு முஸ்லிம் ஆடுயு வாக வரமுடியவில்லை என்பதை மக்களே இனியாவது சிந்திப்பீர்.

ஓட்டளிப்பது நம் ஜனநாயகக் கடமை. நாம் ஓட்டளிப்பதற்கு தகுதியான வேட்பாளர்கள் இல்லாத பட்சத்தில் நமக்கென்றே ஒரு வழிமுறையை அமைத்துள்ளது தேர்தல் ஆணையம் அதுதான் 49-ஓ. எவருக்கு ஓட்டுபோட்டு என்ன செய்ய! நாம் உழைத்தால்தான் நம்வீட்டுக்கு சோறு என்று முந்தைய நாட்களில் ஓட்டு போடுவதற்கு அலட்சியம் செய்தவர்கள்,ஓட்டுபோடாமல் புறக்கணித்தவர்கள் இம்முறை உங்களின் நியாயமான உணர்வுகளை, உங்களின் கோரிக்கையை 49-ஓக்கான 17-A படிவத்தை பூர்த்தி செய்வதின் மூலம் வெளிப்படுத்தலாம்.

நீங்கள் வாக்களிக்கச் செல்லும் வாக்குச் சாவடியிலேயே இப்படிவம் வைக்கப்பட்டிருக்கும். அதிகமான 49-ஓ படிவங்கள் பூர்த்தியாகும் தொகுதியில் தேர்தல் ஆணையம், அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் தங்கள் கவனத்தைத் திருப்பும். அப்போது மேற்கண்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு அது வழிவகுக்கும் என்பதையும் அறியத் தருகிறோம்.

நமதூரின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு நாம் குறிப்பிட்டுள்ள மேற்படி கோரிக்கைகளை யார் காலிலும் விழாமல் நிறைவேற்றப்படுவதற்கு சட்டம் நமக்களித்துள்ள49-ஓ என்ற வழிமுறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துமாறு மிகவும் வேண்டி விருப்பி கேட்டுக் கொள்கிறோம்.


வஸ்ஸலாம்

சிந்திப்பவர்களின் ஓட்டு 49-ஓவிற்கே!

நடுநிலையாளர்களின் ஓட்டு 49-ஓவிற்கே!!

குறிப்பு : இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அச்சடிக்கப்படவில்லை. யாருக்கும் வாக்களிக்க மனமில்லாமல் இருப்பவர்களுக்கு ஜனநாயக ரீதியில், சட்டத்திற்கு உட்பட்டு, தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 49-ஓ மூலம் அவர்களின் உணர்வுகளையும் பிரதிபளிக்கச் செய்யும் ஓர் முயற்சியே!. எனவே இக்கட்டுரை நீங்கள் படிப்பதோடு பிறருக்கும் எத்திவைக்குமாறு வேண்டுகிறோம்.

**************************************************************************
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660
**************************************************************************


நன்றி : நகர வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்
காயல்பட்டினம்
தேதி : 10-04-2011

No comments:

Post a Comment